"செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.'
-திருவள்ளுவர்
உயர்திணை எனப்படும் மக்களுள், பிறர் செய்யமுடியாத அருஞ்செயல்களைச் செய்து முடிப்பவர் பெரியோர். அத்தகையவற்றைச் செய்யாது, எளிய செயல்களையே செய்துமுடிப்பவர் சிறியோர்.
ஒவ்வொரு மனிதனுக்கும் வாய்த்திருக்கும் வாழ்க்கை அதிசயம். அந்த வாழ்க்கையைப் பயன்படுத்தி மற்றவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியை மலர்வித்தால் அது அற்புதம். தூயபக்தி, தன்னலமில்லாத தொண்டு, எதிர்பார்ப்பில்லாத அன்பு இவையனைத் தும் அற்புதங்களை மலர்த்தும்.
திருத்தொண்டர்களின் வாழ்வில் இறைவன் நிகழ்த்திய அற்புதங்களின் தொகுப்பே பெரியபுராணம். இந்த புராணங்களைப் படிப்பவர்கள் அந்த அற்புதங்களிலேயே அதிசயித்து நின்றுபோய்விடுவார்கள். ஆனால் பெரிய புராணத்தில் நாம் கண்டு வியக்கவேண்டியவை இறைவன் அருளிய அற்புதங்களைவிட தொண்டர்களின் மனவுறுதி என்னும் அதிசயத்தைதான். "யார்க்கும் முன்னவனே முன்னின்றால் முடியாத செயலுளதோ' என்கிறார் சேக்கிழார். மனவுறுதி எத்தனை மகத்தானது என்பதை பெரியபுராணம் பெரிய செய்தியாகச் சொல்கிறது.
காசி மாநகரில் பிரம்மதத்தர் என்ற அரசரின் ஆட்சிக்காலம். அரசர் ஆண்டுதோறும் திருவிழா ஒன்றை சிறப்பாக நடத்திவந்தார். அளவிலடங்காமல் மக்கள் கூடுவர். பேதமில்லாமல் அனைவரும் ஒரே குடும்ப மாகக் குதூகலிக்கும் விழா அது.
ஒருசமயம் திருவிழாவின்போது தேவலோகம் உள்ளிட்ட பல இடங்களிலிருந்தும் ஏராளமான தேவகுமாரர்கள் வந்திருந்தார்கள். அவர்களில் குறிப்பிடும் படியாக நால்வர் இருந்தார்கள். அவர்களுள் புத்தர் பெருமானும் ஒருவர்.
அந்த நால்வரும் அணிந்திருந்த அற்புத மான மாலைகளின் நறுமணம் எங்கும் பரவி அனைவரையும் மயக்கியது. அனைவரும் எப்படியாவது அந்த மலர்மாலைகளைப் பெற்றுவிடவேண்டுமென்று விரும்பினார் கள். விருப்பத்தை வேண்டுகோளாகவும் வைத்தார்கள். குறிப்பாக அரசரும், ராஜகுருவும், இளவரசரும் மாலைகளின்மீது அழுத்தமாக விருப்பம் கொண்டிருந்தார்கள்.
அவர்களின் வேண்டுகோளுக்கு நால்வரில் ஒருவரான புத்தர் பதில் சொல்லத் தொடங்கினார். ""பூவுலகவாசிகளே! கக்காரு எனும் கற்பக விருட்சத்தின் பூக்களாலான மாலைகள் இவை. அரிய சக்திகள் பல கொண்டவை. எப்போதும் வாடாது; நறுமணமும் குறையாது. நீங்கள் அனைவருமே இம்மாலைகளை விரும்புகிறீர்கள். ஆனால் இவற்றை அணிவதற்கு சில தகுதிகள் வேண்டும்'' என்றார்.
""சொல்லுங்கள்! சொல்லுங்கள்'' என்று அனைவரும் கேட்டனர்.
நால்வரில் முதலாமவர், ""அடுத்தவர் பொருளைக் களவு செய்யாதவர், அடுத்த வருக்கு தீமை பயக்கும் வார்த்தைகளைப் பேசாதவர், பேராசைகொண்டு செல்வம் சேர்ப்பதற்காகத் தவறான செயல்களைச் செய்யாதவர் யாரோ அவருக் குத்தான் இம்மாலை உரியது'' என்றார்.
இதைத் கேட்டதும் ஆசையாக இருந்த கூட்டம் அப்படியே அமைதியானது. யாரும் முன்வரவில்லை. அந்த வேளையில் படிப்பி லும் வயதிலும் மூத்தவரான ராஜகுரு, "பொய் சொல்லியாவது இம்மாலையைப் பெறவேண்டியதுதான்' என்று, ""நீங்கள் சொல்லும் தகுதிகள் எனக்குண்டு'' என்று சொல்லி முதல் மாலையைப் பெற்றுக்கொண்டார்.
நால்வரில் இரண்டாமவர், ""உறுதியான மனம், அறிவு, நற்செயல்களில் தீவிரமான ஈடுபாடு, உயர்ந்த பொருட்களைத் தனியாக அனுபவிக்கக் கூடாது எனும் எண்ணம் ஆகியவற்றைக் கொண்டவருக்கு இம்மாலை உரியது'' என்றார். ""எனக்குண்டு'' என்று ராஜகுரு அதையும் பெற்றுக்கொண்டார்.
நால்வரில் மூன்றாமவர், ""அறவழியில் செல்வம் சேர்ப்பது, பெரும் வசதி இருந்தாலும் அவற்றுக்கு அடிமையாகாமல் இருப்பது, வெற்றிபெற்றாலும் அகம்பாவ மின்றி இருப்பது ஆகியவை கொண்டவருக்கு இம்மாலை உரியது'' என்றார். ""அந்த தகுதிகள் எனக்குண்டு'' என்று ராஜகுரு மூன்றாவது மாலையையும் பெற்றுக்கொண்டார்.
மக்களெல்லாம் மெய்ம்மறந்து பார்த்துக் கொண்டிருக்கும்போது நான்காமவர், ""எந்த மனிதர் நல்லவர்களை மனதாலும் நிந்திப்பதில்லையோ, நிந்தித்துத் திரிவதில் லையோ, சொல்லிலும் செயலிலும் வேறு பாடில்லாமல் நல்லதையே பேசி நல்லதையே செய்பவர் யாரோ அவருக்கே இந்த மாலை உரியது'' என்று கூறி தன் மலர்மாலையைக் காட்டினார். பார்த்தார் ராஜகுரு, "துணிந்ததுதான் துணிந் தோம்; கடைசிவரை இதை யும் ஒரு கை பார்த்து விடு வோம்; என்று மிகுந்த தைரியத் தோடு, ""நீ சொன்ன நற்குணங்கள் எல்லாம் எனக்குண்டு'' என்று நான்காவது மாலையையும் பெற்றுக்கொண்டார்.
எந்தவிதமான நற்குணங்களும் தகுதி களுமில்லாத ராஜகுரு நான்கு மாலை களையும் பெற்றுக்கொண்டதைப் பார்த்து ஊர்மக்கள் வியந்தார்கள். "அற்ப சந்தோஷத் திற்காகப் பொய்பேசி இப்படி நடந்து விட்டாரே! திருந்தவே மாட்டாரா இவர்?' என்று தங்களுக்குள் பேசி ராஜகுருவை ஏசினார்கள்.
திருவிழா முடிந்தது. தேவகுமாரர்கள் உட்பட அனைவரும் தங்கள் இருப்பிடங் களுக்குத் திரும்பினார்கள். அபூர்வ மாலை களைப் பெற்ற ராஜகுருவும் மிகுந்த பெருமிதத் தோடு வீடு திரும்பினார்.
மறுதினம் காலை ராஜகுரு அபூர்வமான அந்த மாலைகளை அணிந்தபடி ராஜசபையில் நுழைந்தார். அவர் கழுத்திலிருந்த மாலைகள் வாடியிருந்தன; நறுமணமும் இல்லை. அனைத்திற் கும் மேலாக மாலை களை அணிந்த ராஜகுரு கடுமையான தலைவலி யால் பீடிக்கப்பட்டி ருந்தார். அவர் நிலை யைக் கண்டு ஊரே ஏளனம் செய்தது. ராஜகுரு, ""என்னிடமில்லாத தகுதிகளையெல்லாம் கூறி தெய்வீக மாலை களைப் பெற்றுக் கொண்டேன். அவற்றை அணிந்த நேரத்திலிருந்து தாங்கமுடியாத தலைவலி. இந்த மாலைகளைக் கழற்றவும் முடியவில்லை. சித்ரவதையாக இருக்கிறது. என்ன செய்வேன்'' என்று அலறினார்.
ஒரு வாரமாயிற்று. ராஜகுருவின் அவஸ்தை யைக் கண்டு இரக்கம் கொண்ட மன்னர் மறுபடியும் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்தார். நகரெங்கும் விழாக்கோலம் பூண்டது. முன்புவந்த தேவகுமாரர்களைத் துதித்து மறுபடியும் அவர்களை வரவழைத்தார் மன்னர். அவர்கள் வந்ததும் மறுபடியும் நகரெங்கும் நறுமணம் வீசியது. அனைவர் மனதிலும் இனம்புரியாத இன்பம் பரவியது. துயரப்பட்டுக்கொண்டிருந்த ராஜகுருவை அழைத்துக்கொண்டு தேவகுமாரர்களிடம் வந்தார் மன்னர். வந்த ராஜகுருவோ அனைவர் முன்னிலையிலும் தேவகுமாரர்களின் கால் களில் விழுந்து மன்னிப்பு கேட்டு அழுதார்.
தேவகுமாரர்கள் இரக்கம் கொண்டார்கள். ராஜகுருவின் கழுத்திலிருந்த மாலைகளைக் கழற்றினர். ராஜகுருவின் தலைவலி அப்போதே நீங்கியது. மாலைகளும் முன்புபோலவே மலர்ச்சியுடன் நறுமணம் வீசின. தகுதியில் லாமல் உயர்வடைய நினைப்பவர்கள் எவராயினும் அவர்கள் வாழ்வில் அமைதி யாக இருக்கமுடியாது.
அமைதியான வாழ்க்கைக்கு அனைவரும் ஆசைப்பட்டாலும் அடைவதில் ஆயிரம் சிரமங்கள் அடங்கியுள்ளன. அமைதி என்பது வெறும் மௌனமல்ல. அமைதி உள் மனதைச் சார்ந்தது. மௌனம் வெளிப்புற வாழ்வோடு தொடர்புடையது. அமைதி அனைத்து சம்பவங்களையும், வேதனைகளையும், அவநம்பிக்கைகளையும் அகற்றி புத்துணர்வோடு உதயமாகும் ஆழமான நிறைவு. அத்தகைய நிறைவைத் தரவல்ல தொரு திருத்தலம்தான் திருக் கண்ணபுரத்திலுள்ள இராம நந்தீஸ்வரம் திருக்கோவில்.
இறைவன்: இராமநந்தீஸ்வரர், இராமநாதசுவாமி.
இறைவி: சரிவார் குழலியம்மை, சூலிகாம்பாள்.
உற்சவர்: நந்தியுடன் சோமாஸ்கந்தர்.
புராணப் பெயர்: இராம நாதீச்சரம், இராமனதீச்சரம்.
ஊர்: இராமநந்தீஸ்வரம் (திருக்கண்ணபுரம்).
தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம்.
தலவிருட்சம்: மகிழமரம், செண்பகமரம்.
சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இவ்வாலயம் சோழ மன்னர்களால் கட்டப் பட்டது. தேவாரப்பாடல் பெற்ற 274 தலங் களில் 140-ஆவது தலமாகவும், காவிரி தென் கரைத் தலங்களில் 77-ஆவது தலமாகவும் போற்றப்படுகிறது. காமிக ஆகம விதிப்படி காலபூஜைகள் நடப்பதுடன், வேளாக்குறிச்சி ஆதீனத்தின் நிர்வாகத்தில் நன்கு பராமரிக் கப்பட்டு வருகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெரும் சிறப்புகளுடன் பல்வேறு சிறப்புகளைப் பெற்றதொரு தலம்தான் இராமனதீச்சரம்.
"சரிகுழல் இலங்கிய தையல்காணும்
பெரியவன் காளிதன் பெரியகூத்தை
அரியவன் ஆடலோன் அங்கை ஏந்தும்
எரியவன் இராமன தீச்சரமே.'
-திருஞானசம்பந்தர்
தல வரலாறு
இராமாயணப் போரில் இராவணன் உட்பட பல வீரர்களை வீழ்த்தியதால் இராம னுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அது நீங்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த அவர், அயோத்தி திரும்பும் வழியில் பல தலங்களில் சிவவழிபாடு செய்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அதன் ஒரு பகுதி யாக இந்தத் தலத்திற்கும் வந்து, இங்குள்ள புஷ்கரணியில் நீராடி ஈசனை தரிசிக்க வந்தார்.
அப்போது நந்திதேவர், இராமரை மானிடர் என நினைத்து சிவனை நெருங்க விடாமல் மறித்து, ""இராவணனைக் கொன்ற பாவம் உங்களுக்கு நீங்கவில்லை. எனவே தாங்கள் உள்ளே செல்லக்கூடாது'' என்று தடுத்தார். அம்பிகை இந்த சம்பவத்தைப் பார்த்துத் திகைத்து, உடனே அங்கு வந்து நந்தியைத் தனது திருக்கரத்தால் பிடித்துக் கொண்டு, இராமர் உள்ளே செல்ல வழி செய்தாள். இராமபிரானும் சென்று சிவ வழிபாடு செய்தார். அதன்பின் சாபவிமோச னம் பெற்றார். இராமனுக்கு சாபவிமோசனம் கிடைத்ததால் ஈசன் "இராமநாதேஸ்வரர்' என பெயர் பெற்றார். நந்தி வழிமறித்தும், இராமன் உள்ளே சென்று சிவனை வணங்கிய காரணத்தால் இத்தலம் "இராம நந்தீஸ்வரம்' என்று பெயர் பெற்றது.
தலப்பெருமை
முற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவருக்கு புத்திரப்பேறில்லை. சிவபக்தரான அவர் குழந்தை வேண்டி ருத்ர ஹோமம் செய்தார். சிவன் அசரீரியாக "அம்பிகையே உனக்கு மகளாகப் பிறப்பாள்' என்றருளினார். இதன்பின்னர், ஒருசமயம் மன்னர் வனத்திற்கு வேட்டையாடச் சென்ற போது ஓரிடத்தில் நான்கு பெண் குழந்தை களைக் கண்டார். அவற்றை எடுத்து வளர்த் தார். அவர்கள் பிறப்பிலேயே சிவபக்தை களாகத் திகழ்ந்தனர். தகுந்த பருவத்தில் அவர் களை மணந்துகொள்ளும்படி சிவனிடம் வேண்டினார். சிவனும் மணந்துகொண்டார். இந்த அம்பிகையர் நால்வரும் இப்பகுதி யிலுள்ள நான்கு தலங்களில் காட்சிதருகின்றனர்.
அவையாவன:
இராமநந்தீஸ்வரம் (திருக்கண்ணபுரம்)- சரிவார் குழலியம்மை.
திருச்செங்காட்டங்குடி- வாய்த்த திருக் குழல்நாயகி.
திருப்புகலூர்- கருந்தாழ்க்குழலியம்மை.
திருமருகல்- வண்டார்க்குழலியம்மை.
நான்கு அம்பிகையருக்கும் சூலிகாம்பாள் என்ற பொதுப்பெயர் உள்ளது. ஒருசமயம் இப்பகுதியில் வசித்த அம்பாள் பக்தையான ஏழைப்பெண் ஒருத்தி கர்ப்பமடைந்தாள். ஒருநாள் இரவில் அவளது தாயார் ஆற்றைக் கடந்து வெளியில் சென்றுவிட்டாள். அன்றிர வில் பலத்த மழை பெய்யவே, அவளால் கரை யைக் கடந்து வீடு திரும்ப முடியவில்லை.
அப்போது அம்பிகையே அவளது தாயார் வடிவில் சென்று பிரசவம் பார்த்தாள். எனவே இந்த நான்கு தலங்களிலுள்ள அம்பிகைக்கும் "சூலிகாம்பாள்' என்ற பெயர் ஏற்பட்டது. "சூல்' என்றால் "கரு' என்று பொருள். எனவே கருகாத்த அம்பிகை என்றும் பெயருண்டு.
பிரசவம் பார்த்துவிட்டு இரவில் தாமத மாகச் சென்றதால், அம்பிகை கோவிலுக்குள் செல்லாமல் வெளியிலேயே நின்றுவிட்டாள். எனவே இந்த நான்கு தலங்களிலும் அம்பாள் சந்நிதி வெளியில் தனியே அமைந்துள்ளது. அர்த்தஜாம பூஜையில் மட்டும் அம்பிகைக்கு சம்பாஅரிசி, மிளகு, சீரகம், உப்பு, நெய் கலந்த சாதம் நைவேத்தியம் படைப்பது விசேஷம்.
துர்வாச முனிவர் பூஜித்தது
புராண காலத்தில் ஒருநாள் துர்வாச முனிவர் தன் காலை அனுஷ்டானங்களை முடித்து, சிவனை தியானித்து, ருத்ரஜபம் செய்த திருநீற்றை அணிந்து பித்ருலோகம் புறப்பட்டார். செல்லும்வழியில் பெரிய கிணறு ஒன்று தென்பட்டது. இவ்வளவு பெரிய கிணற்றை நாம் பார்த்ததே இல்லையே என்று அதனுள் ஒருகணம் எட்டிப்பார்த்து விட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தார்.
அந்தப் பெரிய கிணற்றினுள் பூலோகத் தில் பாவம் செய்த பலரும் சொல்லமுடி யாத துயரத்தை அனுபவித்துக்கொண்டி ருந்தார்கள்.
துர்வாச முனிவர் குனிந்து அங்கே பார்த்துவிட்டு நகர்ந்த மறுகணமே நிலைமை தலைகீழாக மாறியது. அந்த நரகத்தில் அதிசயம் நிகழ்ந்தது. பாம்புகளும் தேள்களும் மலர்மாலைகளாயின. அமில மழையானது ஆனந்தம் தரும் நிஜமழை யானது. சுட்டெரிக்கும் தீ இதமான தென்றலாய் மாறியது. நரகம் முழுக்க சுகந்த நறுமணம் வீசியது. அங்கே இருந்த பாவ ஆத்மாக்கள் ஆனந்தம் கொண்டனர். முகத்தில் பிரகாசம் வீசியது.
அந்த நரகத்தைக் காவல் காத்த கிங்கரர் கள் பயந்துபோய் எமனிடம் ஓடினார் கள்; அதிர்ந்துபோன எமனும் வந்து பார்த்து அதிசயித்தான். "அல்லல்பட வேண்டியவர்கள் ஆனந்தமாகத் திரிகிறார்களே' என்று பதட் டத்துடன் இந்திரனிடம் ஓடினான். வந்து பார்த்த இந்திரனுக்கும் புரியவில்லை. தேவாதி தேவர்கள் எவருக்கும் புரியவில்லை. எனவே அனைவரும் சர்வேஸ்வரனிடம் போனார்கள். ""சாஸ்திர முறைப்படி ருத்ர ஜபம் செய்த திருநீறு அணிந்த துர்வாசர் பித்ருலோகக் கிணற்றை குனிந்து பார்க்கும் போது, அவரது நெற்றியிலிருந்து ஒரு சிறு துளி நீறு உள்ளே விழுந்துவிட்டது. அதனால் தான் சொர்க்கமாக மாறிப்போனது'' என்றா ராம் சர்வேஸ்வரன். பார்த்தீர்களா ருத்ர ஜெபம் செய்த திருநீற்றின் மகிமையை.
அத்தகைய துர்வாச முனிவர் பூஜித்த லிங்கத் திருமேனி, பைரவர் இராம நந்தீஸ்வரத்தில் உள்ளது சிறப்புவாய்ந்தது.
சிறப்பம்சங்கள்
✷ மூலவர் சுயம்புலிங்கமாய் அருள் பாலிக்கிறார்.
✷ அம்மன், பிடரியின்மேல் சுருண்ட கூந்தல் அழகுடன், தெற்கு நோக்கி நின்றநிலையில் அருள்பாலிக்கிறாள்.
✷ 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரி ராஜப்பெருமாள் கோவிலுக்கு கிழக்கே அரை கிலோமீட்டர் தொலைவிலுள்ள செண்பகவனமான இராம நந்தீஸ்வரத்தில் மகிழமரத்தை தலவிருட்சமாகக் கொண்டதால், இத்தல இறைவனுக்கு "மகிழம்பூவனநாதர்' என்ற பெயரும் உண்டு. சென்னை, திருவொற்றியூரில் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு மகிழ மரத்தடியில் சிவபெருமான் காட்சியளித்தாக பெரியபுராணம் சொல்கிறது. எனவே இம்மரம் இருக்குமிடத்தில் ஈசன் அருள் பலமடங்காகப் பெருகும் என்பது ஐதீகம்.
✷ சோமாஸ்கந்தர் உற்சவமூர்த்தியில், அன்னை நந்தியை தனது இடது திருக்கரத்தால் பிடித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சி அற்புதம்.
✷ இராமர் கோவில்களில் அவரது திரு நட்சத்திரமான புனர்பூசத்தன்று விசேஷ பூஜை நடக்கும். இராமர் வழிபட்ட தலமென்பதால் இங்கு சிவனுக்கு புனர்பூச பூஜை என்னும் சிறப்புப்பூஜை நடைபெறுகிறது. தற்போதும் சாயரட்சை பூஜையை இராமரே செய்வதாக ஐதீகம்.
✷ திருச்செந்தூரில் முருகப்பெருமான் வலதுகையில் மலர்வைத்தபடி காட்சிதருகிறார்.
இத்தலத்தில் இடதுகையில் மலர்வைத்து வலது கையால் ஆசிர்வதித்த கோலத்துடன் வள்ளி, தெய்வானையுடன் காட்சிதருவது சிறப்பு.
✷ ஐப்பசி மாதம் கந்தசஷ்டியை முன்னிட்டு பத்து நாட்கள் உற்சவம் சுப்ரமணியர் தீர்த்தவாரியுடன் நடைபெறுவது விசேஷம்.
✷ இமயத்தில் கேதாரம், குஜராத்தில் சோமநாதம், உஜ்ஜயினியில் மாகாளேசம், காசியில் விஸ்வநாதம், மகாராஷ்டிரத்தில் வைத்தியநாதம், பீமநாதம், நாகேஸ்வரம், திரியம்பகம், குகதேசம், மத்தியப் பிரதேசத்தில் ஓங்காரேஸ்வரம், ஆந்திர ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனம், தமிழ்நாடு இராமேஸ்வரத்தில் இராமநாதம் போன்ற பன்னிரண்டும் ஜோதிர் லிங்கங்கள். இராமனால் வழிபாடு செய்யப்பட்ட இராமேஸ்வரத்தைப்போல இராமனதீச்சரமும் இராமனால் பூஜிக்கப்பட்டது. மூலவருக்கு சிவாச்சாரியார் தீபாராதனை காட்டும்போது ஜோதி புலப்படுவதை தரிசித்து வணங்கினால், இந்தியாவிலுள்ள பன்னிரு ஜோதிர்லிங்கங் களையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய அர்ச்ச கரான இராமநாத சிவாச்சாரியார்.
பரிவார தெய்வங்களின் சந்நிதிகளும் சிறப்பு டன் விளங்குகின்றன.
செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டு பவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருகின்ற தலம்- தவசீலர் துர்வாசர் பூஜித்த காலபைரவர், லிங்கத்திருமேனி உறைகின்ற தலம்- பன்னிரு ஜோதிர்லிங்க தரிசனப் பலன்கள் ஒருசேரக்கிடைக்கின்ற தலம்- நிழல்போல் வருகின்ற பிரம்மஹத்தி தோஷத்தினைப் போக்கியருள்கின்ற தலம்- இராமர், லட்சுமணர், சீதாதேவி, அனுமன் உள்ளிட்ட எண்ணற்றோர் வழிபட்டுப் பேறுபெற்ற தலம்- புத்திர பாக்கியத்துடன் நல்லமுறையில் சுகப்பிரவசமாக சரிவார்குழலியம்மை அருள்கின்ற தலம்- இராமநந்தீஸ்வரத்திலுள்ள இராமநாதேஸ்வரரை வழிபட்டு ராஜவாழ்வு வாழ்வோம்.
காலை 7.00 மணிமுதல் பகல் 11.30 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.
ஆலயத்தொடர்புக்கு: இராமநாத சிவாச்சாரியார், அலைபேசி: 97519 39386, இராமநாத சுவாமி திருக்கோவில், இராம நந்தீஸ்வரம், திருக்கண்ணபுரம் அஞ்சல், நன்னி லம் வட்டம், திருவாரூர் மாவட்டம்- 609 704
மெய்க்காவலர்: மதியழகன்.
அமைவிடம்
திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருப்புகலூரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள முடிகொண்டான் ஆற்றைக் கடந்து திருக்கண்ணபுரம் சென்று, அங்கிருந்து கிழக்கே அரை கிலோமீட்டர் தெலைவிலுள்ள இராமநந்தீஸ்வரர் ஆலயம் செல்லலாம். பஸ் வசதி உண்டு.
படங்கள்: போட்டோ கருணா